திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.51 திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை |
நீலு மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.
|
1 |
கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.
|
2 |
மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ
மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
பன்னி னாரவர் பாலைத் துறையரே.
|
3 |
நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
ஆடி னாரழ காகிய நான்மறை
பாடி னாரவர் பாலைத் துறையரே.
|
4 |
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்த னேநமை யாளுடை யாயெனும்
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.
|
5 |
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.
|
6 |
குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
விரவி னார்பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.
|
7 |
தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.
|
8 |
மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
|
9 |
வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.
|
10 |
உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக்
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |